காலத்தே பயிர்செய் • வாழ்க்கையின் ஒழுங்கு விதி


“காலத்தே பயிர்செய்” நம் செவிகளில் அடிக்கடி ஒலிக்கும் ஒரு பழமொழி. பொதுவாக இதனை திருமணத்தோடு தொடர்புபடுத்தி விளக்குவது வழக்கம். “அந்தந்த வயதில் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்” என்பதே பலர் கூறும் நேரடி பொருள். ஆனால் இந்தச் சொற்றொடரின் உண்மையான ஆழம் அதைவிட விரிந்தது. இது ஒரு நிகழ்விற்கான அறிவுரை அல்ல, அது வாழ்க்கை முழுவதற்குமான ஒழுங்கு விதி.


வாழ்க்கை என்பது காலங்களால் கட்டமைக்கப்பட்ட ஓர் ஓட்டம். இயற்கை போல மனித வாழ்வும் பருவங்களைக் கொண்டது. விதை விதைக்கும் நேரம் வேறு; அறுவடை செய்யும் நேரம் வேறு. இதனைப் போல, செய்ய வேண்டிய செயல் ஒவ்வொன்றிற்கும் அதன் உரிய நேரம் உண்டு.


படிக்க வேண்டிய காலத்தில் படிப்பு முக்கியம். அந்த நேரத்தில் அறிவு விதைக்கப்பட வேண்டும். ஒருவேளை குழந்தைக்கு படிப்பில் ஆர்வம் இல்லையெனில், அதனை வெறும் குறையாகக் கருதாமல், அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளும் பொறுப்பு சூழலுக்கே உண்டு. மனிதர்கள் தனிமையில் அல்ல, சமூக அமைப்பில் வாழ்கின்றனர். ஆதரவு, வழிகாட்டுதல், புரிதல் இவை அனைத்தும் காலத்தோடு இணைந்த மனிதப் பொறுப்புகள்.


வேலை செய்யும் காலத்தில் பொறுப்பு பயிரிடப்பட வேண்டும். ஒழுங்கு, கட்டுப்பாடு, நம்பிக்கை ஆகியவை அக்காலத்தின் பயிர்கள். சிறிய வேலையாக இருந்தாலும், அதனைச் சிறுமைப்படுத்தாமல், காலத்தின் கடமையாக ஏற்று நிறைவேற்றுவது வாழ்க்கையின் நிலைத்தன்மையை உருவாக்குகிறது.


இன்றைய உலகில், நிர்வாகப் பொறுப்புகளும் இதே கோட்பாட்டின் கீழ் வருகின்றன. உதாரணமாக, வரி (Tax) அறிவித்தல். பலர் வரி கட்ட வேண்டிய நிலை இல்லையெனினும், அதனை அறிவிக்காமல் விடுகின்றனர். காலத்தில் செய்ய வேண்டிய செயலை ஒத்திவைப்பது உடனடி சுமையைக் குறைப்பதுபோல் தோன்றலாம். ஆனால் காலம் மௌனமாக நினைவில் வைத்துக் கொள்கிறது. ஆண்டுகள் கடந்த பின், அதே அலட்சியம் ஒரு சிக்கலாகத் திரும்பி வரும்.


இவ்வாறே, திருமணமும் வாழ்க்கையின் ஒரு காலப் பொறுப்பு. குடும்பம் உருவாக்கும் காலத்தில் புரிதல் விதைக்கப்பட வேண்டும். குழந்தைகள் பிறக்கும் காலத்தில் பாதுகாப்பும் வழிகாட்டுதலும் பயிரிடப்பட வேண்டும். ஒவ்வொரு காலமும் தனக்கென ஒரு தர்மத்தை உடையது.


இந்தப் பழமொழியின் மிக ஆழமான பரிமாணம் முதியோர்காலத்தில் வெளிப்படுகிறது. “காலமே போயிற்றே; இப்போது என்ன பயிர்?” என பலர் யோசிக்கலாம். ஆனால் வாழ்க்கையின் இறுதிக் காலமே சில மிக முக்கியமான பயிர்களுக்கு உரிய நிலம்.


மனசாட்சியின் சுமைகளை விடுவித்தல்.

சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்தல்.

மன்னிப்பும் நன்றியும் வெளிப்படுத்தல்.

பொறுப்புகளை ஒப்படைத்தல்.

சொத்து, உரிமை, நினைவுகள் இவற்றை தெளிவுபடுத்தல்.


இவை அனைத்தும் இறுதிக் காலத்தின் பயிர்கள். அந்த அறுவடை அமைதியாகும்.


செய்யாமல் விட்ட விஷயங்கள் பெரும்பாலும் நமக்கு சிக்கலாக வராது. ஆனால் பின்னால் வாழ்பவர்களின் வாழ்க்கையில் அவை பெருக்கெடுத்து(overflow) நிற்கும். தீர்க்கப்படாத பொறுப்புகள், தெளிவுபடுத்தப்படாத உரிமைகள், சொல்லப்படாத உண்மைகள் (பிறருக்கு தெளிவு தேவைப்பட்டால், இல்லாவிடில் நம்முடனே இருகட்டும் இறகட்டும், இது வேரு தலைப்பு)  இவை அனைத்தும் காலத்தின் மீது விதைக்கப்படாத விதைகளே.


“காலத்தே பயிர்செய்” என்பது அவசரப்படுத்தும் அறிவுரை அல்ல; ஒழுங்கு கற்றுத்தரும் ஞானம். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் அதன் இயல்பான கடமையோடு இணைக்கச் சொல்லும் ஓர் அழைப்பு.


Comments

Popular posts from this blog

Spiritual Awakening Or Just Running Away From Yourself?

Stop Calling It “Spiritual” ! Just Live

Walking My Path, Honoring Yours